நாட்டு கோழி வளர்ப்பின் நன்மைகள்

நாட்டு கோழி வளர்ப்பின் நன்மைகள் 


கோழி
விவசாயத்துணைத் தொழில்களில் இன்றைக்குக் கால்நடை வளர்ப்பு, நல்ல லாபம் தரும் தொழிலாக மாறிவருகிறது. அதிலும் குறிப்பாக நாட்டுக்கோழி வளர்ப்பு பிரபலமடைந்து வருகிறது. விவசாயிகள் மட்டுமில்லாமல், அனைத்து தரப்பினரும் நாட்டுக்கோழி வளர்ப்பில் ஆர்வம் காட்டுகின்றனர். முறையாகக் கவனித்தால், குறைந்த செலவில், நல்ல லாபம் ஈட்டக்கூடிய தொழிலாக நாட்டுக்கோழி வளர்ப்பு இருக்கிறது. அதே நேரம், ஆர்வமாக நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபட்ட பலர், ‘இது சரிப்படாது’ எனப் பண்ணையை  இழுத்து மூடிவிட்டு ஓடிவிடுகிறார்கள். ஒருபக்கம் லாபம் எடுக்கும் நபர்கள், மறுபக்கம் நஷ்டத்தைச் சந்திக்கும் நபர்கள்.. எதனால் நிகழ்கிறது இந்த முரண்பாடு? நாட்டுக்கோழி வளர்ப்பில் நஷ்டத்தைத் தவிர்க்கும் வழிகள் என்ன என்பது  பற்றி அறிவோம்.



“நாட்டுக்கோழி வளர்ப்புல ஈடுபடுறவங்க, முதல்ல ஒன்றை தெளிவா புரிஞ்சுக்கணும். ‘கோழி வளர்க்கறது என்ன பெரிய சூத்திரமா? கிராமத்துல தன்னால அலையுற நாட்டுக்கோழிங்கள நாங்க சின்ன வயசுலயே பார்த்துட்டோம்‘னு நினைச்சுகிட்டு இதுல இறங்கக்கூடாது. நாட்டுக்கோழிகளைப் பொறுத்தவரை அதைக் கூண்டுல அடைச்சு வெச்சு வளர்த்தா பெருசா லாபம் கிடைக்காது. அதுகளை மேய்ச்சல் முறையில வளர்க்கும்போதுதான், லாபமும் கிடைக்கும், கோழியும் நாட்டுக்கோழிக்கான ஒரிஜினல் குணங்களோட இருக்கும். நாட்டுக்கோழி வளர்ப்பு அருமையான வருமானம் தரக்கூடியத் தொழில்தான் அதுல எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனா, அதை நாம முறையா செய்யணும்.


நாட்டுக்கோழி வளர்ப்புல நஷ்டத்தைத் தவிர்க்கணும்னா நாலு விஷயத்துல கவனமா இருந்தாப்போதும். வளர்ப்புக்காக நாட்டுக்கோழிகளை வாங்கும்போது, தரமான ஒரிஜினல் நாட்டுக்கோழிகளைப் பார்த்து வாங்கணும். ரொம்பப் பேர் இந்த இடத்துல தடுமாறிடுறாங்க. முதல் கோணல் முற்றும் கோணல்னு சொல்ற மாதிரி, இதுல தப்பு நடந்தா, தொடர்ந்து எல்லாமே தவறாகிடும். அதுனால, தரம், ரகம் பார்த்து வாங்குறதுல கவனமா இருக்கணும். இது முதல் விஷயம்.

ரெண்டாவது, நாட்டுக்கோழிகளுக்கு பெருசா நோய்கள் தாக்காதுன்னாலும், முறையா அந்தந்த நேரத்துல கொடுக்குற தடுப்பு மருந்துகளைக் கொடுக்கணும். அதை முறையா கடைபிடிச்சா, நோய் தாக்குதல்ல இருந்து கோழிங்களைக் காப்பாத்திடலாம். பெரும்பாலான பண்ணைகள், நோய் தடுப்பு முறைகளை முறையா செய்யாததாலதான், கோழிகள் இறப்பு அதிகமாகி நஷ்டத்தைச் சந்திக்குது. கோழிகளைப் பொறுத்தவரைக்கும், வருமுன் காப்போம்தான் சிறந்த வழி. அதனால, நோய் வருதோ இல்லையோ, அந்தந்த சீசன்ல, அதுக்கு போட வேண்டிய தடுப்பூசிகளை முறையா போடணும்.


கோழி

மூணாவது, தீவன மேலாண்மை. பொருளாதாரரீதியா பலர் நஷ்டத்தைச் சந்திக்கிறது இதுலதான். நாட்டுக்கோழிகளைப் பிராய்லர் மாதிரி வளர்க்கக்கூடாது. அதுகளை மேய்ச்சல் முறையில விட்டுட்டா, அதுங்களுக்குத் தேவையான பாதி தீவனத்தை அதுங்களே தேடிக்கும். மீதியை நாமக் கொடுத்தாப் போதும். அதுலயும் மனுசங்களால பயன்படுத்த முடியாத கழிவுகளைத்தான் கோழிகளுக்கு கொடுக்கணும். அழுகிய காய்கறிகள், முட்டைகோஸ், காலிஃபிளவர் இலைகள்னு கொடுத்தாப் போதும். நீங்க எவ்வளவு விலை அதிகமான, சத்தான தீவனம் கொடுத்தாலும், 120 நாள்கள்ல ஒண்ணே கால் கிலோவுல இருந்து ஒன்றரை கிலோ எடை வரும். இதுதான் அதோட இயல்பு, உங்க சத்தான தீவனம், அதிகபட்சம் 100 கிராம் எடையைக் கூட்டும் அவ்வளவுதான்.


எனவே, நாட்டுக்கோழிகளுக்கு விலை அதிகமான தீவனம் கொடுக்கக்கூடாது, கடைகள்ல தீவனம் வாங்கிக்கொடுக்கக் கூடாது. கடைகள்ல தீவனம் வாங்கும்போது, கிலோ 25 ரூபாய் வரைக்கும் ஆகிடும். அதுனால, தீவனத்தை நாமளே தயாரிச்சுத்தான் கொடுக்கணும். 50% மக்காச்சோளம், 40% தவிடு, 8% பிண்ணாக்கு அல்லது கருவாடு அல்லது சோயா இவற்றில் ஏதாவது ஒன்று, 2% தாது உப்புக்கலவை, 1% உப்பு இவற்றை ஒன்றாகப் போட்டு அரைத்தால் தீவனம் தயார். ஆனா, அதுலயும் சில முறைகளைக் கடைபிடிக்கணும். விலை மலிவான, தரம் குறைஞ்ச தானியங்களைத்தான் வாங்கி பயன்படுத்தணும். உதாரணமா மக்காச்சோளம் வாங்குனா, தரமானதா வாங்கக்கூடாது. உடைஞ்சுப்போன, தரம் குறைஞ்ச மக்காச்சோளத்தை வாங்கணும். நாம தயாரிக்கிற தீவனம் கிலோ பத்து ரூபாயைத் தாண்டக்கூடாது அப்பத்தான் லாபகரமானதா இருக்கும்.


நாலாவது, தீவனம் கொடுக்குற முறை.  தீவனம் வெச்சா, காலி பண்ணிகிட்டே இருக்கும். தட்டு காலியா இருக்கேன்னு நாமளும் கொட்டிகிட்டே இருக்கக்கூடாது. ஒரு வார வயதுடைய ஒரு கோழிக்கு 10 கிராம் தீவனம் கொடுத்தாப் போதும். இதை ஒவ்வொரு வாரமும் பத்து பத்து கிராம் கூட்டிகிட்டேப் போகணும். உதாரணமா, முதல் வாரம் 10 கிராம் கொடுத்தா, நாலாவது வாரம் 40 கிராம் கொடுக்கணும். இந்தத் தீவனத்தையும், ஒரு நாளைக்கு மூணு வேளையா பிரிச்சுக்கொடுக்கணும். இந்தத் தீவனம் போதாதுதான். மீதியை ஏற்கெனவே சொன்ன மாதிரி மார்க்கெட் வேஸ்ட் மூலமா சரிகட்டலாம். மேய்ச்சல் முறையில விடும்போது, அதுவே மீதி உணவைத் தேடிக்கும். நாட்டுக்கோழி வளர்ப்புல ஈடுபடுறவங்க, அசோலா வளர்ப்பைக் கட்டாயம் செய்யணும். இது மூலமாகவும் தீவனச்செலவை குறைக்கலாம். ஆக, இந்த நாலு விஷயத்துலயும் கவனமா இருந்துட்டாப் போதும். நாட்டுக்கோழி வளர்ப்பு லாபகரமானதா இருக்கும்ங்கிறதுல எந்தச் சந்தேகமும் இல்லை’’


எந்த சீசனில் என்ன மருந்து!

குஞ்சுகளிலிருந்து வளர்க்கும்போது, குஞ்சு பொறித்ததிலிருந்து, 7 முதல் 9 நாள்களுக்குள் ஆர்டிவிஎப் 1 என்ற சொட்டுமருந்தைக் கொடுக்க வேண்டும். இதைக் கண்களில் அல்லது மூக்கில் ஒரு குஞ்சுக்கு ஒரு சொட்டு வீதம் ஊற்றவேண்டும். 27 முதல் 29 நாள்களுக்குள் லசோட்டா என்ற சொட்டு மருந்தை இதே முறையில் ஊற்ற வேண்டும். 58 முதல் 60 நாள்களில் ஆர்டிவிகே என்ற ஊசியை இறக்கைகளில் போடவேண்டும். இந்த அனைத்து மருந்துகளையும் சனிக்கிழகைத்தோறும் அரசு கால்நடை மருத்துவமனைகளில் இலவசமாக போட்டுக்கொள்ளலாம்.

Comments

  1. Royal 777 Casino - thauberbet.com matchpoint matchpoint 메리트카지노 메리트카지노 687Hunter's Arena Legends PS5 Game Deals & Reviews

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நாட்டுக்கோழி முட்டையின் பயன்கள்

தினமும் ஒரு கோழி முட்டை, டாக்டருக்கு ”குட்பை”!

இயற்கை முறையில் நாட்டு கோழி வளர்ப்பு முறை